அல்-முக்தஸர்
ٱلْحَجُّ أَشْهُرٌ مَّعْلُومَـٰتٌ ۚ فَمَن فَرَضَ فِيهِنَّ ٱلْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِى ٱلْحَجِّ ۗ وَمَا تَفْعَلُوا۟ مِنْ خَيْرٍ يَعْلَمْهُ ٱللَّهُ ۗ وَتَزَوَّدُوا۟ فَإِنَّ خَيْرَ ٱلزَّادِ ٱلتَّقْوَىٰ ۚ وَٱتَّقُونِ يَـٰٓأُو۟لِى ٱلْأَلْبَـٰبِ ﴿١٩٧﴾
ஹஜ்ஜுடைய காலம் குறிப்பிட்ட மாதங்களாகும். அது ஷவ்வால் மாதத்தில் தொடங்கி துல்ஹஜ் பத்தில் நிறைவடைகிறது. யார் இந்த மாதங்களில் ஹஜ் செய்வதை தன்மீது கடமையாக்கி, நிய்யத் வைத்து அதில் நுழைந்துவிட்டாரோ அவர்மீது உடலுறவு கொள்வதோ அதற்கு முன்னோட்டமான செயல்களில் ஈடுபடுவதோ தடைசெய்யப்பட்டுள்ளது. அதுபோன்று அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியாமல் பாவமான காரியங்களில் ஈடுபடுவதும் தடையாகும். ஏனெனில் இது புனிதமான காலமும் புனிதமான இடமுமாகும். கோபத்தையும் வெறுப்பையும் உண்டுபண்ணும் விவாதங்களிலும் ஈடுபடக்கூடாது. நீங்கள் செய்யக்கூடிய நற்செயல்கள் அனைத்தையும் அல்லாஹ் அறியக்கூடியவன். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்கு கூலி வழங்குவான். ஹஜ்ஜின் காலங்களில் உங்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொள்ளுங்கள். உங்கள் அனைத்துக் காரியங்களிலும் நீங்கள் செய்யும் ஏற்பாடுகளில் மிகச் சிறந்தது "தக்வா" என்னும் இறையச்சம்தான். அறிவுடையோரே! என் கட்டளைகளைச் செயல்படுத்தி, நான் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி என்னையே அஞ்சிக் கொள்ளுங்கள்.