அல்-முக்தஸர்
تِلْكَ ٱلرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلَىٰ بَعْضٍ ۘ مِّنْهُم مَّن كَلَّمَ ٱللَّهُ ۖ وَرَفَعَ بَعْضَهُمْ دَرَجَـٰتٍ ۚ وَءَاتَيْنَا عِيسَى ٱبْنَ مَرْيَمَ ٱلْبَيِّنَـٰتِ وَأَيَّدْنَـٰهُ بِرُوحِ ٱلْقُدُسِ ۗ وَلَوْ شَآءَ ٱللَّهُ مَا ٱقْتَتَلَ ٱلَّذِينَ مِنۢ بَعْدِهِم مِّنۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ ٱلْبَيِّنَـٰتُ وَلَـٰكِنِ ٱخْتَلَفُوا۟ فَمِنْهُم مَّنْ ءَامَنَ وَمِنْهُم مَّن كَفَرَ ۚ وَلَوْ شَآءَ ٱللَّهُ مَا ٱقْتَتَلُوا۟ وَلَـٰكِنَّ ٱللَّهَ يَفْعَلُ مَا يُرِيدُ ﴿٢٥٣﴾
நாம் உமக்கு எடுத்துக்கூறிய இந்தத் தூதர்களில் சிலரை வஹியிலும் பின்பற்றும் மக்களிலும், அந்தஸ்திலும் சிலரைவிட மேன்மைப்படுத்தியுள்ளோம். அவர்களில் மூசா போன்ற சிலருடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான். அவர்களில் சிலருக்கு அல்லாஹ் உயர்ந்த அந்தஸ்தை வழங்கியுள்ளான், உதாரணமாக, முஹம்மது நபிக்கு. அல்லாஹ் அவர்களை மனிதர்கள் அனைவருக்கும் இறுதித் தூதராக அனுப்பினான். அவர்களின் சமூகம் மற்ற எல்லா சமூகங்களைவிடவும் சிறப்பிக்கப்பட்டது. நாம் மர்யமின் மகன் ஈசாவுக்கு அவருடைய தூதுத்துவத்தை உண்மைப்படுத்தக்கூடிய தெளிவான அற்புதங்களை வழங்கினோம். அவர் இறந்தவர்களை உயிர்ப்பித்தார்; பிறவிக்குருடர்களையும் தொழுநோயாளிகளையும் குணப்படுத்தினார். அவர் அல்லாஹ் இட்ட கட்டளைகளை நிறைவேற்றுவதற்கு ஜிப்ரீலைக்கொண்டு நாம் அவரைப் பலப்படுத்தினோம். அல்லாஹ் நாடியிருந்தால்; தூதர்களுக்குப்பின் வந்தவர்கள், தெளிவான சான்றுகள் வந்த பின்னரும் அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். ஆயினும் அவர்கள் கருத்துவேறுபாடு கொண்டார்கள்; பிளவுபட்டார்கள். அவர்களில் சிலர் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டார்கள்; சிலர் அவனை நிராகரித்தார்கள். அவர்கள் சண்டையிடக்கூடாது என அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். ஆயினும் அவன் தான் நாடியதைச் செய்கிறான். தான் நாடியவர்களுக்கு தன் கருணையால் ஈமானின் பக்கம் வழிகாட்டுகிறான். தான் நாடியவர்களை தன் நீதியுடன், அறிவுடன் வழிதவறச் செய்கிறான்.